"கோயில்களை தனிச் சொத்தாக மாற்றவிட மாட்டோம்!"- பாஜக-வைச் சாடும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்

“பிற மதத்தினர் தங்கள் வழிபாட்டுத் தலங்கள், சொத்துகளை அவர்களே நிர்வாகம் செய்வதுபோல் இந்து மதக் கோயில்களையும், சொத்துகளையும் நிர்வாகம் செய்ய இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும். இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை” என்று இந்து அமைப்பினரும், பா.ஜ.க தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கோயில்

இந்த நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில், “ `தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், முதல் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து மூடிவிடுவோம்’ என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கூறியிருப்பதை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் பணி நியமிக்கப்பட்ட போது

இந்து வழிபாட்டாளர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புதான் அண்ணாமலையின் இந்த அறிவிப்புக்குக் காரணம். பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தவுடனே, அறநிலையத்துறையை இழுத்து மூடுவோம் என்று அண்ணாமலை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிராமணரல்லாத மற்ற சாதியினர் யாரும் அர்ச்சகராகக் கூடாது என்பது மட்டுமல்ல, சிதம்பரம் கோயிலைப்போலவே, தமிழ்நாட்டிலுள்ள எல்லா கோயில்களையும் பிராமணர்களின் தனிப்பட்ட சொத்தாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதும், திருக்கோயில்களிலிருந்து தமிழையும் தமிழர்களையும் வெளியேற்றவேண்டும் என்பதும்தான் இவர்களின் நோக்கம்.

கடந்த ஆண்டுகளில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து இந்து அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சந்தித்து ஆகமக் கோயில்களில் எங்களைப் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அப்போது, அனைத்து இந்து அமைப்புகளையும் சந்தித்து கேட்டதற்கு, அவர்கள் எங்களுக்காகப் போராட முன்வரவில்லை.

அர்ச்சகர் பயிற்சி மாணவர்களுக்கு தமிழ் அர்ச்சனை நூல்கள் வழங்கல்

காரணம், `கிராமக் கோயிலில் மட்டும்தான் நீங்கள் பூஜை செய்ய வேண்டும். பரம்பரையாக இருக்கிற கோயில்களில் அவர்கள்தான் செய்ய வேண்டும்’ என வழக்குகள் தொடுப்பது, எதிர்ப்பு தெரிவிப்பது அனைத்தும் இந்த அமைப்புகள்தான்.

ஓர் அமைப்பின் தலைவராக இருந்தவர், `என்னிடம் கிராம கோயில்கள் நிறைய இருக்கின்றன. அதில் எல்லா மாணவர்களுக்கும் பணிகளை ஏற்பாடு செய்கிறேன். ஆனால், பெரிய கோயில்களுக்கும், ஆகமக் கோயில்களுக்கும் நீங்கள் பூஜை செய்ய முடியாது’ என்று கூறினார்.

எங்களுக்குக் கொலை மிரட்டலும், நாங்கள் தாக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர் மாணவர் சங்கம், கருவறை தீண்டாமைக்கு முடிவுகட்டும் வரை போராடும்.

திருச்சி, குமாரவயலூர் கோயிலில் நியமிக்கப்பட்டிருக்கும் பிராமணரல்லாத இரண்டு அரச்சகர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது இந்து வழிபாட்டாளர் சங்கத்தினர்தான் என்பதை பக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கோயில்களும், கோயில்களின் சொத்துகளும் இந்து மக்கள் அனைவருக்கும் சொந்தமானவை. அவற்றைக் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் அபகரிக்கும் நோக்கத்துடன், இந்து அறநிலையத்துறையை ஒழிக்க முயல்கின்றனர். கோயில்கள் அரசு கண்காணிப்பில் இருப்பதனால்தான், முதல்வர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்திருக்கிறார். ஆறு அர்ச்சகர் பயிற்சி நிலையங்களையும் தொடங்கிவைத்திருக்கிறார். அரசின் இந்த முயற்சிகள் அனைத்துக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் உறுதுணையாக இருக்கும்.

ரங்கநாதன்

தற்போது அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் முறைப்படி குடமுழக்கு, தமிழ் வேள்விகள், ஒவ்வொரு கடவுளுக்குமான தமிழ் வழிபாட்டு முறைகள், போற்றி நூல்கள், தமிழ் நாட்காட்டி ஆகியவற்றை முன்னாள் மாணவர்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம், தமிழக அரசு நியமனம் செய்திருக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சங்கம் இணைந்து திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். சமூகநீதியை நிலைநாட்டவும், தமிழ் வழிபாட்டை ஊக்குவிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது சங்கம் உறுதுணையாக இருக்கும். அர்ச்சகர் பயிற்சி முடித்த 176 மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று முதல்வரையும், இந்து சமய அறநிலையத்துறையையும் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.