மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை… அதானி குழுமத்தில் நடப்பது என்ன?

முக்கியமான பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் தேசியம் என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிப்பதாக ஹிண்டன்பர்க் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், இந்தியாவின் அதானி குழுமம் சமீபகாலமாகச் சரிவைச் சந்தித்து வருவதுடன், உலகப் பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதானி குழுமமும், ஹிண்டன்பர்க் நிறுவனமும் மாறிமாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
மீண்டும் குற்றஞ்சாட்டிய ஹிண்டன்பர்க்
இந்த நிலையில், முக்கியமான பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் தேசியம் என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிப்பதாக ஹிண்டன்பர்க் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயக நாடு. வளர்ந்து வரும் வல்லரசாக உள்ள இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக நம்புகிறோம். ஆனால், இந்தியாவின் வளர்ச்சியை அதானி குழுமம் தடுப்பதாகவும் நம்புகிறோம். அதானி குழுமம் இந்திய தேசியக் கொடியைப் போர்த்திக்கொண்டு நாட்டையே கொள்ளை அடிக்கிறது. உலகின் பணக்காரர்களில் யார் மோசடி செய்தாலும் அதுமோசடிதான்” என்று தெரிவித்துள்ளது.
image
அதானி குழுமம் Vs ஹிண்டன்பர்க் நடப்பது என்ன?
ஹிண்டன்பர்க் வெளியிட்ட முதல் அறிக்கை
அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், “அதானி குழுமம் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளது” என தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அடிப்படையில் 85 சதவீதம் பின்னடைவைக் கொண்டுள்ளன எனவும் அது தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், ஆவணங்களின் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அது கூறியிருந்தது. இந்த அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புகள் கடும் சரிவைக் கண்டன.
அறிக்கையால் சரிவடைந்த அதானி குழுமம்
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்னர், அதானி துறைமுகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவை, நடப்பாண்டின் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்த மிகக் குறைந்த நிலையான 7.3%-க்கு சரிந்தது. அதே நேரத்தில் அதானி எண்டர்பிரைசஸ் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.7% சரிந்தது. அதானிக்கு சொந்தமான சிமெண்ட் நிறுவனங்களான ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் முறையே 6.7% மற்றும் 9.7% சரிந்தன. ரீஃபினிட்டிவ் தரவுகளின் அடிப்படையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனத்தின் கடன் சுமைகள் அதிகரித்துள்ளன. அதன்படி அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் கடன் சுமை 2,000 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 25ஆம் தேதி முதல் அதானி குழும பங்குகளின் விலை சரிந்து, அந்தக் குழுமத்தின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
image
அதானி குழுமம் பதில் அறிக்கை
இதற்கு அதானி குழுமம், ”இந்த அறிக்கை தவறானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்திருந்ததுடன், ”அதானி குழுமத்தின் மதிப்பைக் குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கிறது. ஆகையால் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தது. அதானி குழுமத்தை சேர்ந்த முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதை தடுக்கவே இந்த அவதூறு பிரச்சாரம் என அதானி குழுமம் குற்றம்சாட்டியிருந்தது.
ஹிண்டன்பர்க் மீண்டும் அறிக்கை
இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க், ”தாங்கள் அறிக்கை வெளியிட்டு 36 மணி நேரம் கடந்த பிறகும், நாங்கள் கேள்வி எழுப்பிய எதற்கும் அதானி நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் தாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம்” என தெரிவித்திருந்தது குறிப்பிட்டிருந்தது.
image
மேலும், “எங்கள் அறிக்கையின் இறுதியில், தாங்கள் 88 நேரடியான கேள்விகளைக் கேட்டிருந்தோம். அவற்றுக்கு அதானி நிறுவனம் வெளிப்படைத்தன்மையுடன் பதில் தெரிவிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதுவரை எந்த ஒரு பதிலும் அந்நிறுவனத்திடம் இருந்தும் வரவில்லை. இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு, 720 மேற்கோள்களுடன், 106 பக்கங்கள் கொண்டதாக நாங்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையை அடிப்படை, ஆதாரமற்றதாக கூறிய அதானி நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்து வருகிறோம்.
சட்டரீதியாக எதிர்கொள்ள தயார்
அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் நாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம். இந்த விஷயத்தில் அதானி நிறுவனம் தீவிரமாக இருக்கும்பட்சத்தில், எங்கள் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அதானி குழும் தொடர்பாக எங்களிடம் விரிவான அறிக்கை உள்ளது. எங்களுக்கு எதிரான எந்தவொரு சட்டவடிக்கையும் தகுதியற்றதாகவே இருக்கும்” என அது தெரிவித்திருந்தது. இதற்கிடையே பங்குச் சந்தையில் கடந்த வாரம் (ஜனவரி 27) மேலும், அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் 20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.
image
பங்குச் சந்தையிலும் சரிவு
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீதம் சரிவை கண்ட நிலையில், அதானி துறைமுகம் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. இதைத் தவிர அதானி கிரீன், அதானி வில்மர், அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன், மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இவை தவிர சமீபத்தில் அதானி குழுமத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளும் 17 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தன.
இதனால், அதானி குழும பங்குகள் 85 சதவீதம் வரை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக ஹிண்டன்பர்க் கருத்து தெரிவித்திருந்தது. அதானி குழுமத்திற்கு பல்வேறு வங்கிகள் கடன் அளித்துள்ளதால் வங்கிகளின் பங்குகள் விலையும் சரிவை சந்தித்தன என்பதும், இதன்மூலம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில்தான் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தேசியம் என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிப்பதாக ஹிண்டன்பர்க் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.