வெளியானது தளபதி 67 அப்டேட்.. ஃபோட்டோ வெளியிட்ட லோகேஷ்.. குஷியில் ரசிகர்கள்!

விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்குகிறார் என்ற ஊரறிந்த தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ. அதன்படி தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என இன்று (ஜன.,30) பிற்பகல் 3 மணியளவில் 67 புள்ளிகளை மட்டும் வைத்து 6.07 மணிக்கு அறிவிக்கப்படும் என ட்விட்டரில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பதிவிட்டிருந்தது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் ட்விட்டரில் #Thalapathy67 என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் சரியாக 6.07 மணிக்கு தளபதி 67-ஐ நாங்கள்தான் தயாரிக்கிறோம் என்று ட்விட்டரில் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

அதில், தளபதி 67க்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவ் ஆக்‌ஷனில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் நடன இயக்குநராக பணியாற்றுகிறார் என்றும், சதீஸ் குமார் கலை இயக்க, லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைதி ஆகியோர் வசனம் எழுதுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 2ம் தேதி தொடங்கிய தளபதி 67 படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக மாஸ்டர் படத்தை தயாரித்திருந்த செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அண்மையில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தின் விநியோகஸ்தராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி 67 குறித்து தயாரிப்பு நிர்வாகத்தின் அறிவிப்பை அடுத்து, சமூக வலைதளங்களுக்கு பிரேக் விட்டிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஷூட்டிங்கின் போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்து, “மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தது பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிப்ரவரி 1, 2 , 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 குறித்த அப்டேட்கள் வரும் என லோகேஷ் கனகராஜ் மைக்கேல் பட விழாவின் போது கூறியிருந்த நிலையில், அதற்கு முன்னோட்டமாக தற்போது வந்த அப்டேட்டும் விஜய்யின் தளபதி 67 ஃபோட்டோவும் அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.