களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

பழநி: தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பழநி நகரம் மீண்டும் களைகட்ட துவங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இந்தத் திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்வர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா ஜன. 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் பிப். 3ம் தேதியும், தைப்பூச தேரோட்டம் பிப். 4ம் தேதி நடக்கிறது. எனினும், தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி நகருக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

அடிவார பகுதி முழுவதும் காவி, பச்சை ஆடை உடுத்திய பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடுவது, கும்மியாட்டம் ஆடுவது, அலகு குத்தி வருவது என பல்வேறு விதங்களில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் ஒலிக்கும் அரோகரா கோஷம் காண்போரை பரவசமடைய செய்கிறது. இடும்பன் குளம், சண்முகநதி ஆறுகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி செல்கின்றனர். தைப்பூச தேரோட்டத்திற்கு 3 நாட்கள் உள்ள நிலையில் பக்தர்கள் குவிந்து வருவதால், கும்பாபிஷேக கோலாகலத்துக்குப்  பிறகு மீண்டும் தற்போது பழநி நகரம் களைகட்ட துவங்கி உள்ளது.

* நத்தத்தை கடந்தது நகரத்தார் காவடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, கண்டனூர், புதுவயல், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நகரத்தார் காவடி குழுவினர் குன்றக்குடியில் ஒன்று சேர்ந்து, பழநி தைப்பூசத்திற்கு காவடியுடன் பாதயாத்திரையாக 400 ஆண்டுகளுக்கும் மேலாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டு பழநி கோயில் தைப்பூசத்தையொட்டி கிளம்பிய 300 பேர் கொண்ட நகரத்தார் காவடி குழுவினர் நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள வாணியர் காவடி மடத்தை வந்தடைந்தனர்.

அங்கு பாரம்பரிய முறைப்படி பானக பூஜைகள் நடத்தி அங்கிருந்து பழநியை நோக்கி நடந்து சென்றனர். இக்காவடி குழுவினர் வெள்ளை வேட்டி அணிந்து பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பழநியில் தைப்பூச விழாவிற்கு மறுநாள் நகரத்தார் காவடி குழுவினருக்கு என்று தனியாக சிறப்பு பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.