தொடங்கியது வேட்புமனுத் தாக்கல்..ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈபிஎஸ் சார்பில் இவர் வேட்பாளரா?

தொடங்கியது வேட்புமனுத் தாக்கல்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இன்று துவங்கும் வேட்பு மனு தாக்கல் வருகிற 7ஆம் தேதி வரை நடைபெறும். அதனையடுத்து 8 ஆம் தேதி வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடைபெறுகிறது.
வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குவதை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
image
காலை 11 மணி முதல் 3 மணி வரை
இடைத்தேர்தல் நடைபெறும் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், நீதிமன்றங்கள் போன்றவற்றில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகின்றன. காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சல் வழியாக வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 100 மீட்டர் தூரத்திற்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக அறைக்குள், நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு வேட்பாளர் நான்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
image
இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்!
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் விவிகேஎஸ்என் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் மேனகா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் வேட்பாளர் சிவா பிரசாத், தேமுதிக கட்சி சார்பில் ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற பிரதான கட்சிகள் தற்போது வரை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதியை அறிவிக்கவில்லை. இதனையொட்டி இன்று முதல் நாள் வேட்பு மனு தாக்கலை ஒட்டி, மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
ஈபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்
அதிமுகவின் தேர்தல் வேட்பாளர் யார் என்பதை முடிவெடுக்கும் ஆலோசனை கூட்டமானது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், திண்டல் வில்லரசம்பட்டி தனியார் விடுதியில், நிர்வாகிகளோடு சுமார் 5 மணி நேரமாக நடைபெற்றுவருகிறது.
image
அதிமுகவின் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, கேவி ராமலிங்கம், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் உட்பட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகளும், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். சுமார் 5 மணி நேரம் கடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகும், அதிமுக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஈபிஎஸ் சார்பில் யார் போட்டியிட வாய்ப்பு?
அதிமுகவில் ஈபிஎஸ் தரப்பின் சார்பில் ஈரோடு முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசும் இந்த போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. தென்னரசு பெயர் உறுதி செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. பிப்ரவரி 5 ஆம் தேதி வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
image
மேலும் ஓபிஎஸ் தரப்பில் இடைத்தேர்தல் வேட்பாளாராக நடிகர் மற்றும் இயக்குநரான பாக்கியராஜை போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது.
செருப்பு மாலையுடன் வந்த வேட்பாளர்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர், கோவையைச் சேர்ந்த நூறுமுகமது என்பவர் செருப்பு மாலையோடு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்துள்ளார். செருப்பு மாலையோடு வந்ததால் சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
10 ரூபாய் நாயணத்துடன்..
தேர்தலில் போட்டியிட செலுத்தப்படும் டெபாசிட் தொகை 10 ஆயிரம் ரூபாயை பத்து ரூபாய் காயன்களாக மாற்றி காந்தியவாதி ரமேஷ் செலுத்தினார்.
10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ரமேஷ் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
’ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது’
அதேபோல மதுரையை சேர்ந்த சங்கர பாண்டியன் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது கொடுக்கக் கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காகித பண தூண்டிலுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.