மது விற்கலைன்னா ஆட்சியை நடத்தவும் முடியாது என்பது, தி.மு.க.,வுக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு!| Speech, interview, report

துாத்துக்குடி தொகுதி தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேட்டி:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உள்ள, காங்., வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எதிர்க்கட்சி பிளவுபட்டு இருப்பதால், இதை வைத்து ஒரு சிலர் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.

அ.தி.மு.க., ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தாலும், தி.மு.க.,வை வெல்ல முடியாது. தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வருவோம் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. படிப்படியாக, மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதுவிலக்குன்னு சொன்னா ஆட்சியை பிடிக்கவும் முடியாது… மது விற்கலைன்னா ஆட்சியை நடத்தவும் முடியாது என்பது, தி.மு.க.,வுக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு!

தமிழக சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:

உலக வரலாற்றில் அரசியல் தலைவர்கள், சீர்திருத்தவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நடைபயணங்கள், மக்கள் சமூகத்தில் ஆட்சி மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. அதேபோல, ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணமும், நாட்டு மக்களிடமும், ஆட்சியிலும், சிறந்த மாற்றங்களை கொண்டு வரும் என்பது,நிதர்சனமான உண்மை.

ராகுல் நடைபயணத்தால் தாடி வளர்ந்து, உடல் மெலிந்து, அவருக்கு தான் மாற்றம் நடந்துள்ளது… ஆட்சியில் மாற்றம் நிகழுமா என்பது கேள்விக்குறி தான்!

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து, மே, 24ம் தேதியே பாசனத்திற்காக நீர் திறந்த போதும், மழை, வெள்ள பாதிப்புகளால், சம்பா சாகுபடி ஒரு மாதம் தாமதமாக துவங்கியதால், பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை.

இந்நிலையில், வழக்கமான நிகழ்வாக ஜன., 28ம் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது, டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, மேலும், 15 நாட்களுக்கு தமிழக அரசு தண்ணீரை திறக்க வேண்டும்.

latest tamil news

‘தளபதி ஆட்சியில், மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது’என, தி.மு.க., அமைச்சர்கள் சொன்னாங்களே… அப்புறம் ஏன் அணையை மூடணும்?

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:

ஈரோடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, எதிரணியில் இருப்பவர்கள் எல்லாம், பிரதான எதிர்க்கட்சியுடன் ஓரணியாக கூட்டணி சேர்ந்து, தி.மு.க.,வுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். தமிழக அரசியல், 50 ஆண்டாக கூட்டணியில் தான் சுழன்று கொண்டிருக்கிறது.

தேர்தல் வாக்குறுதியை, தி.மு.க., நிறைவேற்றாதது பெருங்குறை. அதைவிட, ஆட்சிக்கு வந்த குறைந்த காலத்தில், மக்கள் மீது அதிக சுமையை ஏற்றியதும் தி.மு.க., தான்.

எதிரணியில் இருக்கும் எல்லாருமே, அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்காங்களே… அப்புறம் எப்படி மற்றவருக்கு ஆதரவு தருவாங்க?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.