முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் – கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் கடும் எதிர்ப்பு

சென்னை: பேனா நினைவுச்சின்னம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது திமுகவினர் எதி்ர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த சீமான், பேனா நினைவுச்சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் ஆகியோர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

சட்டப்பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் அருள்முருகானந்தம், ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சங்கர், நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த பெருமாள், திருவல்லிக்கேணி வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி, பாஜக மீனவர் பிரிவைச் சேர்ந்த நீலாங்கரை முனுசாமி, மீனவர் அமைப்பின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தனசேகர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன், தேசிய பாரம்பரிய மீனவர்சங்க ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி, ராயபுரத்தைச் சேர்ந்த இளங்கோ, மீனவர் அமைப்பு நிர்வாகி மகேஷ், சமூக செயல்பாட்டாளர் முகிலன், மீனவர் அமைப்பைச் சேர்ந்த காசிமேடு நாஞ்சில் ரவி, திருமுருகன் காந்தி ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, குறிப்பிட்ட சிலர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கும் திமுகவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

நீங்கள் சத்தம் போடுங்கள். உங்களுக்கும் சேர்த்துதான் நான் பேசுகிறேன். நினைவுச்சின்னம் வைக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. கடலுக்குள் வேண்டாம் என்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வரும். சின்னம் அமைக்க 8,651.13 சதுரமீட்டர் பகுதியை எடுத்து அங்கு கல், மண் கொட்ட வேண்டும். அழுத்தம் வரும். பவளப்பாறைகள் பாதிக்கப்படும். அங்கு பேனாவை வைத்தால், ஒரு நாள் வந்து நான் உடைப்பேன்.

அறிவாலயத்தில் அல்லது அவரது நினைவிடத்துக்குள் வைக்க வேண்டியதுதானே. சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடலுக்குள் பேனா சின்னம் வைப்பதை எதிர்க்கிறோம். நினைவுச்சின்னம் அமைப்பதை தடுத்து நிறுத்தும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். இது உறுதி என்றார்.

அதைத் தொடர்ந்து, ஆட்சியரிடம் அவரது ஆதரவாளர்கள் கையெழுத்திட்டு அளித்த கடிதங்களையும் வழங்கினார்.

அதன்பின், பசும்பொன் பாண்டியன், தம்பிதுரை உள்ளிட்ட மீனவர் அமைப்புகளைச் சேர்ந்த பலர் ஆதரவாக பேசினர்.

இறுதியாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் பேசும்போது, ‘‘காலநிலை மாற்றம் குறித்த அறிக்கையில் சென்னைக்கு பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் நினைவுச்சின்னத்தை மாற்றி அமைக்கும் நிலைஏற்பட்டுவிடக் கூடாது. கருணாநிதி இருந்திருந்தால் இதற்கு அனுமதியளித்திருக்க மாட்டார். இதைக் கருத்தில் கொண்டு முதல்வர் முடிவெடுக்க வேண்டும்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து, கருத்துக்கேட்பு கூட்டம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுற்றுச்சூழல் சார்ந்த சில அமைப்பினர்தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.