வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன்

தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்று அங்கு முன்னணி நடிகர் ஆனவர் சந்தீப் கிஷன். தற்போது தெலுங்கு, தமிழில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவரும் மைக்கேல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசனுக்காக வந்துள்ள அவர் அளித்த பேட்டி வருமாறு:

இந்த படம் என் கேரியரில் முக்கியமான படம். பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம். இரண்டு ஆண்டுக்கு மேல் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறேன். 1970 முதல் 1990 வரை நடக்கிற மாதிரியான கதை. ஒரு பெண்ணுக்காக ஆண் எந்த லெவலுக்கும் செல்வான் என்பதுதான் படத்தின் ஒன்லைன். கேங்ஸ்டர் தளத்தில் இருந்து ஒரு லவ் எமோல்சன் படம்.

நான் ஒரே நேரத்தில் 3 மொழிகளில் அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு, இந்தி. ஆனால் அந்த நேரத்தில் தமிழ் படம் டிராப் ஆக இந்தி, தெலுங்கில் அறிமுகமானேன். பின்பு தெலுங்கிலேயே செட்டிலாகிவிட்டேன். யாருடா மகேஷ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தாலும் அதிகமாக நடித்தது தெலுங்கில்தான். ஒரு கட்டத்தில் படமே இல்லாமலும் இருந்தேன். அந்த நேரத்தில்தான் மாநகரம் படம் பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஏற்ற தாழ்வுகளை சந்தித்துதான் இந்த இடத்தில் நிற்கிறேன்.

ரெஜினாவையும் என்னையும் இணைத்து பல காலமாகவே வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் எனது அன்பான தோழி, எனது குடும்ப நண்பர் இதை தாண்டி வேறு எதுவும் இல்லை. அந்த அடிப்படையில்தான் மைக்கேல் புரமோசன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

கொரோனாவுக்கு பிறகு சினிமாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் நல்ல நல்ல கதைகளை விரும்புகிறார்கள். வட இந்திய மக்கள் தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள். ரீமேக் செய்ய வேண்டாம். அப்படியே டப் செய்து பார்க்க விரும்புகிறார்கள். இது நல்லதொரு மாற்றம். தென்னிந்திய படங்கள் பெரிய தாக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில்தான் மைக்கேல் படத்தையும் அங்கு வெளியிடுகிறோம்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி நட்புக்காக ஒரு காட்சியில் நடிக்க வந்தார். ஆனால் கதையும், கேரக்டரும் பிடித்து விடவே அதிக இடம் வேண்டும் என்றார். இதனால் கேரக்டரை வலுவாக்கி அவர் 20 நிமிடங்கள் வருவது மாதிரி மாற்றம் செய்தோம். அவரது கேரக்டர்தான் படத்தின் செண்டர் பாயிண்ட்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.