வெளியானது ஹன்சிகாவின் திருமண வீடியோ டீசர்! என்ன ஆனது நயன்-விக்கியின் திருமண வீடியோ?

ஹன்சிகாவின் திருமண ஆவணப்படத்தின் முழு வீடியோ எப்போது வெளியாகும், அதில் என்ன உள்ளது என்பது குறித்த தகவலுடன் டீசர் ஒன்றை பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் முன்னிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா பேலஸில் தனது காதலரான சோஹெல் கத்தூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி கரம் பிடித்தார் நடிகை ஹன்சிகா. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணம் டாக்குமெண்ட்ரியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக, டீசருடன் நடிகை ஹன்சிகா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்த டீசர், ஹன்சிகா அவரது தாயாருடன் கலந்துரையாடும் வகையில் உள்ளது.

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண வீடியோ குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. ‘Nayanthara: Beyond The Fairytale’ என்ற அந்த வீடியோவின் சிறிய கிளிப்பிங்ஸ் அடங்கிய புரோமோவை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதமே முழு வீடியோவும் வெளியாக வேண்டியிருந்தது.

ஆனால், இடையில் நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் படம் குறித்த ஆவணப்படத்தை தயாரிப்பது தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 23-ம் தேதி வரை திருமணம் குறித்த ஆவணப் படத்தின் படப்பிடிப்புகளை விக்னேஷ் சிவன் நடத்தி வந்ததாகவும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து மார்ச் மாதம் அல்லது ஏப்ரலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆவணப் படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.