இந்திய பட்ஜெட் 2023: “ஏமாற்றத்தையே தந்திருக்கிறது" விவசாயிகள் கருத்து!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்தக் கூடிய வகையிலான திட்டங்களுடன் நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்கிற பெரும் எதிர்ப்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவியது. இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு பெருமளவில் ஏமாற்றத்தை தந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பட்ஜெட் திருப்தியளிக்கவில்லை ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக கூறி வருகின்றனர்.

விவசாயம்

இது குறித்து வழக்கறிஞரும், விவசாயியுமான ஜீவக்குமார் கூறுகையில், “விவசாயத்திற்கு என தனிப் பட்ஜெட் நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். விவசாயத்தை தொழிலாக கருதாமல் பொதுசேவையாக அறிவித்து ஒன்றிய அரசு விவசாயிகள் வாழ்வு மேம்பட திட்டங்கள் மூலம் உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பிரதமர் மோடி அரசினுடைய கடைசி பட்ஜெட் இது என்பதால் விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தோம்.

தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கஜா புயல், நிவர், நிரவி புயல் ஆகியவற்றால் கடும் பாதிப்புக்குள்ளானது. அதிலிருந்து மீண்டு வர விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு என தனியாக நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு கர்நாடக மாநில விவசாய வளர்ச்சிக்கு மட்டும் ரூ 5300 கோடி ஒதுக்கியிருக்கிறது. இதன் மூலம் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் தடவியிருப்பதாக கருதுகிறோம். பிரதமரின் உழவர்கள் வெகுமதி திட்டம் தமிழகத்தில் 50 சதவீதம் குறைந்து விட்டது.

ஜீவக்குமார்

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி செய்த பரிந்துரை குறித்து மூச்சு விடவில்லை. விவசாயிகளின் வளர்ச்சி என்பது உற்பத்தி கூடுவதில் இல்லை விவசாயிகள் வருமானம் பெருகுவதே உண்மையான வளர்ச்சி என்கிற நிலையில் ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட் தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலான விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது.” என்றார்.

வாழை விவசாயி மதியழகன் கூறுகையில், “காவிரி கரையை ஒட்டியிருக்கும் திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் வாழை விவசாயம் பெருமளவில் செய்யப்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் வாழை சார்ந்த பொருள்களை பாதுகாப்பதற்காக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன் இடைத்தரகர்கள் இல்லாமல் வாழை இலை மற்றும் தார்களை மத்திய அரசே கொள்முதல் செய்து பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதும் எங்களது நீண்ட நாள் கோரிக்கை.

மதியழகன்

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் வாங்கும் உரம் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் வாங்க கூடிய விவசாயம் சார்ந்த பொருள்கள் அனைத்தையும் வரி இல்லாமல் விற்பனை செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது “என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் கூறுகையில், “விவசாயிகள் வருமானத்தை பெருக்க கூடிய எந்த அறிவிப்பும் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கலில் இடம் பெறவில்லை. விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி கடன் கொடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டதே தவிர சொன்ன மாதிரி முழுமையாக செயல்படுத்தியதாக தெரியவில்லை. விளை பொருள்களுக்கு குறைந்தபட்ட ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிறோம் அது குறித்த அறிவிப்பு இல்லை.

சாமி.நடராஜன்

குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க தனிசட்டம் கொண்டு வரவேண்டும் என கூறியிருந்தோம். விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்குவோம் என்றனர். ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் இதில் இல்லை. மேலும் சிறு,குறு விவசாயிகள் மேம்படுத்துவதற்கான அறிவிப்பும் இல்லை. நதிகள் இணைப்பு, நீர்ப்பாசனம் குறித்தும் இல்லாததால் விவசாயிகள் இந்த பட்ஜெட்டை ஏமாற்றம் நிறைந்திருப்பதாகவே பார்க்கின்றனர்.” என்றார்.

சுவாமிமலை விமல்நாதன் கூறுகையில், “இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கின்ற இந்திய ஒன்றிய கோவர்தன் மற்றும் பிரணாம் திட்டங்களை பாராட்டுகின்றோம். இந்தியா விடுதலைப் பெற்று 75 ஆண்டுகாலம் கடந்தும் இந்திய வரலாற்றில் ஒரு முறை கூட வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கையை இதுவரை இருந்த எந்த ஒரு அரசும் வெளியிடவில்லை. இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் நடக்கவில்லை.

சுவாமிமலை. விமல்நாதன்

விவசாயம், விவசாயிகள் வளம் பெற வேண்டும் என்றால் நீர்பாசன மேம்பாடு குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். ஆனால் நீர்பாசனம் மற்றும் நீர் மேலாண்மைக்கான எந்த அறிவிப்பும் இல்லை. குறிப்பாக பேரிடர் காலங்களில் விவசாயிகள் பாதிக்கபடும் போது அவர்களை காப்பதற்காக நிதி ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் பேரிடர் மேலாண்மைக்கு என தனியாக நிதி ஒதுக்கியதாக தெரியவில்லை.

கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் தனியாக ரூ 5,300 கோடி ஒதுக்கியுள்ளனர். அந்த மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதில் பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்கிற தேர்தல் லாபத்தை மட்டுமே மனதில் வைத்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இது ஏற்புடையது இல்லை. இந்தியாவின் பாதுகாப்புதுறைக்கு ஒதுக்குவதற்கு இணையாக விவசாயத்திற்கும் நிதி ஒதுக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

மத்திய பட்ஜெட் 2023

பயிர்கடன் தள்ளுபடி, வட்டியில்லா பயிர்கடன் தர வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசு வடமாநிலங்களில் உள்ள நதிகளை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவிட்டுள்ளது. தமிழகம், கேரளா புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலப் பகுதிகளின் மிக புனிதமான நதிகளாக கருதப்படும் காவிரி, தாமிரபரணி நதிகளை தூய்மைப்படுத்த பாதுகாத்திட ஒரு ரூபாய் கூட இதுவரை நிதி ஒதுக்கியதில்லை அது குறித்த அறிவிப்பு இந்த முறையும் இல்லை. இது போன்ற பல காரணங்களால் எங்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.