ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இபிஎஸ்-ன் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பேசிய அண்ணாமலை!

பா.ஜ.க-வினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலமாக இன்று மதியம் திருச்சிக்கு வருகை தந்தார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை ஆரம்பிக்கும்போது, அடுத்து வரக்கூடிய 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு அமிர்த காலம் என்று கூறியிருக்கிறார். அந்த வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அச்சாணியாக இந்த வருட பட்ஜெட் இருக்கும். குறிப்பாக உள்கட்டமைப்புகளுக்காக 10 லட்சம் கோடி ரூபாக்கு மேல் மத்திய அரசு முதலீடு செய்யவிருக்கிறது. எகனாமிக் சர்வேயைப் பார்க்கும்போது நம்முடைய வளர்ச்சி இந்தாண்டு 6.8 சதவிகிதம் இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். கொரோனா காலக்கட்டத்துக்குப் பிறகு முழுமையாக மீண்டு வந்து, அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பாதையில் நாடு செல்கிறது என்பது எகனாமிக் சர்வேயில் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

அண்ணாமலை

அதைத் தொடர்ந்து, “எடப்பாடி அணியில் வேட்பாளரை அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களின் கூட்டணியில் இருக்கிறீர்கள். உங்களிடம் கலந்தாலோசித்தார்களா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “பொதுவாக அரசியலைப் பொறுத்தவரை நாம் யாரிடம் என்ன பேசினோம் என்பதை சொல்வது நாகரிகமாக இருக்காது. அதனால கொஞ்சம் பொறுங்கள். நாம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசினால், அது நன்றாக இருக்காது. 2024 தேர்தலையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். இந்த இடைத்தேர்தலை இரண்டு மாதங்கள் கழித்து நாம் மறந்துவிடுவோம். அடுத்த பிரச்னை என்னவென்றுதான் பேசப் போகிறோம். அதனால், எங்களைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியின் அராஜகம், பண பலம், அரசியல் இயந்திரத்தை தாண்டி நிற்கக்கூடிய ஒரு பலமான வேட்பாளர்தான் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இன்றைக்கு இடைத்தேர்தலில் 10,000 ரூபாய் கொடுக்கலாமா, 20,000 ரூபாய் கொடுக்கலாமா என்பதுதான் பேச்சாக இருக்கிறது. அதை ஆடியோவில் கேட்டிருப்பீர்ள். அதைத் தவிர மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “பேனா சிலை வைப்பது சம்பந்தமான கருத்துக்கேட்புக் கூட்டத்துக்கு பா.ஜ.க சார்பாக, எங்களுடைய மீனவர் அணியின் மாநிலத் தலைவர் முனுசாமி அவர்கள் சென்றிருந்தார். முனுசாமி என்ன சொன்னாரோ, அதுதான் எங்களுடைய கட்சியின் கருத்தும்கூட. தமிழ்நாட்டில் சிலை கலாசாரம் எல்லாம் பக்கமுமே ஊடுருவியிருக்கிறது. போட்டிப் போட்டுக்கொண்டு சிலை வைக்கிறார்கள். அதில் குறிப்பாக ஒரு சென்சிட்டிவ் பகுதியில், 13 மீன்பிடி கிராமங்களுக்குப் பிரச்னை ஏற்படும் பகுதியில் அரசு மற்றும் மக்களுடைய வரிப்பணத்தை செலவு செய்து, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைக்கூட நடைமுறைப்படுத்தாத தி.மு.க அரசு, இதற்கு ஏன் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டும். எங்களுடைய கட்சியின் சார்பாக முனுசாமி அவர்கள் கருத்தை சொல்லும்போதுகூட பேசவிடவில்லை.

அண்ணாமலை

‘நீ வெளிய வந்தா உன்னை அடிச்சிடுவேன்’ என தி.மு.க-வினர் சொன்னதையும் தாண்டி, தன்னுடைய கருத்தை முனுசாமி பதிவுசெய்துவிட்டு வந்தார். அது உண்மையாலுமே அரசு நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டமா, அல்ல தி.மு.க-வுடைய மாவட்டச் செயலாளர்களை வைத்துக்கொண்டு, யார் அதிகமாகச் சத்தம் போடுகிறார்கள் என்பதை மக்களுக்கு காட்டக்கூடிய கூட்டமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. தி.மு.க-வினர் தங்கள் சொந்த செலவில், அவர்களுடைய அறிவாலயப் பணத்தை வைத்து, அவர்கள் வாங்கிய இடத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதற்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. ஆனால், பொது இடத்தில் என்ன வைத்தாலும், மக்களுடைய கருத்துகளை அவர்கள் மதிக்க வேண்டும்” என்றார்.

இறுதியாகப் பேசியவர், “எந்தவொரு முதல்வருக்கும் இல்லாத வகையில், தமிழக முதல்வருடைய செல்வாக்கு சரிந்திருக்கிறது. பொது இடத்தில் ஓர் அமைச்சர் கல்லை எடுத்து அடிக்கிறார். இன்னொரு அமைச்சர் தொண்டரை அடிக்கிறார், டேப்டு கான்வர்சேஷன், `கோயிலை இடிப்பேன்’ என ஒரு எம்.பி சொல்கிறார்… இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க-வுக்குத் தெரியவிலை.

பேனா நினைவுச்சின்னம் |கருத்துக்கேட்பு கூட்டம்

அவர்கள் மிகப்பெரிய சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்கள் என்னதான் செய்தாலும், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலின் முடிவு, மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பேனா சிலை விவகாரத்தில் தமிழர்களுடன் கைகோக்கத் தயாராக இருக்கிறோம். என்.ஜி.ஓ, மீனவச் சங்கங்கள், பிரதிநிதிகள், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் என எல்லோருடனும் கைகோத்துக் கொண்டிருக்கிறோம்” என்றவர்,

“எடப்பாடி தரப்பு `தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி’ என பெயர் வைத்து பா.ஜ.க-வுக்கு என்ன சொல்ல வருகிறது?” என்று கேட்டதற்கு, “நான் பேசுகிறேன். சரியான நேரத்தில் பேசுகிறேன்” என முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.