திமுக: `கனிமொழி’ விளக்கம்… மீண்டும் விவாதப் பொருளான மதுவிலக்கு கொள்கை

குடியரசு தின விழாவையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. அப்போது டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் பெருகும் வகையில் சிறப்பான பணியை  மேற்கொண்டதாக கூறி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மேற்பார்வையாளர், விற்பனையாளர் என நான்கு பேருக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே, விஷேச நாள்களில் டார்கெட் வைத்து மது விற்பனை நடத்தி வரும் அரசின் நடவடிக்கை சமூக வலைதலங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர். 

மது விலக்கு

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் பிரபல தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுக-வின் துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்த போது,  மதுவிலக்கு பற்றிய கேள்விக்கு, பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தேர்தலின் போதும் சொல்லவில்லை தேர்தல் வாக்குறுதியும் அளிக்கவில்லை என்றார். மது விற்பனையை குறைப்பதாகவே கூறினோம் என்றும் கனிமொழி விளக்கமளித்தார். 

கனிமொழியின் விளக்கத்தை ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டாலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எவ்வளவு என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது குறித்து  முடிவெடுக்க  முடியாமல் திமுக திணறி வருவதாகவும், பலர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 

இதுகுறித்து, திமுக மாணவரணி தலைவர் இராஜீவ் காந்தியிடம் பேசினோம், “கடந்த காலங்களில் மதுவிலக்கு குறித்து பேசிய கட்சிதான் திமுக. ஆனால், தற்போதைய சூழலில் நுகர்வு கலாசாரத்தின் ஒரு பகுதியாக  மதுப்பழக்கம் மாறி விட்ட நிலையில், இனி பூரண மதுவிலக்கு குறித்து திமுக பேசாது” என்றார். அதேநேரம், “இதுவரை பள்ளி கல்லூரிகளுக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 300-க்கும் மேற்பட்ட கடைகள் மாற்றப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார். மேலும், பாஜக அரசியல் லாபத்திற்காக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசிய போது, “கனிமொழியின் பேச்சு கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் தான் இளம் விதவைகள் அதிகம் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் மது ஆலைகளை மூடுவோம் என்றும் கூறி விட்டு, இன்று நாங்கள் மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளிக்கவில்லை என கூறுவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்.” என்றார்,

மேலும் தொடர்ந்தவர், “மதுகடைகளை மூடுவோம் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு, இன்று அதை விமர்சிக்கும் பாஜக-விடம், `நீங்கள் ஏன் கர்நாடகாவில் மது விலக்கை அமல்படுத்த வில்லை?’ என்று ஒப்பீடு செய்வது அர்த்தமற்றது. கடைகளை மாற்றுவது எல்லாம் தற்காலிக தீர்வு மட்டுமே… பூரண மதுவிலக்கே நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்” எனவும் குறிப்பிட்டார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.