நிலத்துக்கு இழப்பீடு தொகை வழங்காததால் விழுப்புரம் வீட்டுவசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி

விழுப்புரம்: விழுப்புரம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ஷேக்காதர் அலி. இவருக்கு சொந்தமாக சலாமேடு பகுதியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியம் சார்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. சதுர அடி ரூ.2 வீதம் கணக்கிட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதுபோதாது என்று ஷேக்காதர் அலி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் சதுர அடிக்கு ரூ.16 கணக்கிட்டு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீட்டு தொகையை வீட்டுவசதி வாரியம் வழங்கவில்லை. இதையடுத்து விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் கட்டளையை நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார் வட்டியுடன் சேர்த்து ரூ.24,89,028 பணத்தை வழங்க வேண்டுமெனவும், இல்லையென்றால் அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த நிலையில், இதன்பிறகு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் நேற்று விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்வதற்காக நீதிமன்ற ஊழியர் ராஜி மற்றும் வழக்கறிஞர்கள் சென்றனர். அவர்களிடம் செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி அவகாசம் கேட்டார். ஆனால் மேலும் அவகாசம் கொடுக்க முடியாது என்று கூறி 6 பேன்கள், பீரோ, மேஜை உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.