CBCID: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண  வழக்கில் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த நிலையில், அதை தொடர்ந்த வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணையை முறையாக நடத்தக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மாணவி பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், மாணவி பயன்படுத்திய செல்ஃபோன் ஜனவரி 20ம் தேதி  காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். மேலும் ஜிப்மர் மருத்துவ குழு நடத்திய பிரேத பரிசோதனையின் அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார். 

விசாரணையின் தற்போதைய நிலை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, விசாரணை நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர், மாணவி பயன்படுத்திய செல்ஃபோன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், மற்ற விசாரணை விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். 

தடயவியல் துறை அறிக்கை கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். 

இதையடுத்து, ஜிப்மர் குழு பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரர் ராமலிங்கத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர்.சர்வதேச பள்ளியில் படித்து வந்த மாணவி மரணமடைந்ததை அடுத்து, அங்கு வன்முறைகள் அரங்கேறின. 2022 ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், பள்ளியின் உடைமைகளை அடித்து நொறுக்கி, தீ வைத்தும் சூறையாடினர். இந்த வன்முறைக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவி மரணம், அதனைத் தொடர்ந்த போராட்டம், வன்முறைகள், பள்ளி  மூடல், பள்ளிக்கு ஏற்பட்ட சேதம் என பல வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது இந்த வழக்குகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த வழக்குத் தொடர்பாக சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும், பாதிக்கப்பட்டவர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.