தைவானில் வசித்து வரும் ஹுவாங் என்பவர், 40 செ.மீ உயரமும், 60 செ.மீ நீளமுள்ள இறக்கையுடன் கூடிய பெரிய அளவிலான கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவரின் கிளி, ஜாக்கிங் சென்று கொண்டிருந்த மருத்துவர் லின் மீது உரசியபடி பறந்துள்ளது.

இதனைச் சற்றும் எதிர்பாராத மருத்துவர் கீழே தவறி விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. இந்த விபத்தினால் பொருளாதார ரீதியாகத் தான் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
நீதிமன்ற விசாரணையில், ‘விபத்தினால் ஒரு வாரம்வரை மருத்துவமனையில் தங்கும் நிலை ஏற்பட்டதாகவும், அடுத்த அரை வருடத்திற்கு எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும்’ தெரிவித்துள்ளார்.
மனுதாரர் தரப்பில் வாதிட்ட நீதிபதியும், `பாதிக்கப்பட்டவர் ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர். இவர் அறுவை சிகிச்சை செய்யும் சமயங்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருக்கும். இவரால் தற்போது நடக்க முடிந்தாலும், நீண்ட நேரம் நின்றாலே, கால்கள் மறுத்துவிடுகிறது. சிகிச்சையின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஹுவாங் ஈடுசெய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளியின் உரிமையாளருக்கு 2 மாத சிறைத் தண்டனையும் 74 லட்சம் ரூபாய் (91,350 அமெரிக்க டாலர்) அபராதமும் விதித்துள்ளது.

‘நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாகவும் ஆனால் தன்னுடைய பறவை வேண்டுமென்றே ஆக்ரோஷமாகச் செயல்படவில்லை. இந்த அபராத தொகை அதிகமாக இருப்பதால், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளேன்’ என்று ஹுவாங் தெரிவித்துள்ளார்.
`ஒரு புறாவுக்குப் போரா’ என்பது போல், ஒரு கிளியினால் ஏற்படுத்தப்பட்ட விபத்து, நீதிமன்றம் வரை சென்றிருப்பது தைவான் நாட்டு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.