லக்னோ: ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தர பிரதேச மாநில சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லக்னோவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் சித்திக் கப்பனின் ஜாமீன் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளது. அந்த உத்தரவில், சித்திக் கப்பன் வேறு எந்த வழக்குகளுக்கும் தேவைப்படவில்லை என்றால் அவரை விடுதலை செய்யலாம் என்று காவல் கண்காணிப்பளருக்கு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அகலாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி இருந்தது. அதே போல், கடந்த 2022, செப். 9ம் தேதி சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழ் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கி விடுதலை செய்தது. ஆனாலும் பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு நிலுவையில் இருந்ததால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்தார்.
விடுதலை குறித்து சித்திக் கப்பன் கூறுகையில்,” 28 மாதங்களுக்கு பின்னர் நான் சிறையில் இருந்து வெளியே வருகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ஊடகங்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என் மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டன. இப்போது வெளியே இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஹத்ராஸில் நடந்தது என்ன? – 2020 செப்டம்பர் 14 ஆம் தேதி ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய தலித் பெண் ஒருவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க வயலுக்குச் சென்றார். அங்கு அவரை உயர் சாதியாக அறியப்படும் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த சந்தீப், ராமு, லவகுஷ், ரவி என்ற 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அது வெறும் பாலியல் வன்கொடுமை வழக்காக மட்டும் இருக்கவில்லை. அந்தப் பெண்ணின் நாக்கை துண்டித்து, அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையே 6 நாட்களுக்குப் பின்னர் செப்டம்பர் 20-ஆம் தேதி தான் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சிபிஐ கைகளுக்கு மாறியது. அலிகர் மருத்துவமனையிலிருந்து அந்தப் பெண், டெல்லி சாஃப்டர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செப்டம்பர் 29ஆம் தேதி அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணைகளில் அப்பெண்ணின் நாக்கை யாரும் துண்டிக்கவில்லை கழுத்தை நெறிக்கும்போது அவர் நாக்கைக் கடித்ததால் நாக்கு துண்டானது என்றெல்லாம் கூட வாதாடப்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இறந்துபோன அப்பெண்ணின் சடலம் அவரது சொந்த ஊரில் அவசர அவசரமாக போலீஸாராலேயே தகனம் செய்யப்பட்டது. தங்கள் மகளின் சடலத்தை தாங்கள் தகனம் செய்வதற்கு முன் போலீசாரே செய்துவிட்டதாக அவர்கள் கூறினர்.