ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவருகின்றன. அந்த வரிசையில், அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்து, அதன்படியே இருதரப்பும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்றும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில், தான் கையொப்பமிட்ட படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மனு மீது உடனடியாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் தற்போது பதிலளித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஆறு பக்க பதிலில், “இரட்டை இலை சின்னம் குறித்த பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாகத் தேர்தல் அதிகாரி முடிவெடுப்பார். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி யாரும் எங்களிடம் அணுகவில்லை.
தேர்தல் ஆணையம், ஒரு கட்சியின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதோ, முறைபடுத்துவதோ இல்லை. கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை.

மேலும், 2022 ஜுலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.