தமிழக அரசின் ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில்’ உள்ளவரா நீங்கள் ? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் ஆரம்ப முதலீட்டு தொகையாக சமூகநலத் துறையின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்படும். பெண் குழந்தையின் 18 வயதுக்கு பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்படும்.

இந்நிலையில், மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள்,தங்களது ஆதார் எண்ணைஇணைப்பதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தமிழக அரசின் திட்டங்களிலும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, உதவித்தொகை, ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைவோரும் விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள், ஆதாா் எண்ணை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்க வேண்டும். ஒருவேளை இதுவரை ஆதாா் எண் பெறப்படாத நிலையில், ஆதாருக்கு பெற்றோா் மூலம் விண்ணப்பித்து, அதைக் கொண்டு திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆதாா் விண்ணப்பித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதாா் பெறுவதற்கான விண்ணப்ப நகல் இணைக்க வேண்டும். அத்துடன், புகைப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரியால் சான்றொப்பம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.