நாமக்கல்லில் பிரியாணி சாப்பிடும் போட்டி! ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்!

உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும் என்றால், நம்மில் பலருக்கும் பிரியாணி என்பது தான் பதிலாக இருக்கும். அந்த அளவுக்கு இன்று பிரியாணி நிறைய பேருக்கு விருப்ப உணவாக உள்ளது. அதிலும் பிரியாணியை வீட்டில் சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், நிறைய பேருக்கு ஹோட்டலில் சாப்பிடுவது தான் பிடிக்கும். அதனால் தான் நம்ம ஊரில் பிரியாணியை மட்டும் தயார் செய்யும் நிறைய பிரியாணி கடைகள் உள்ளது. அதிலும் 100 ரூபாய் கொடுத்து விட்டு இஷ்டம் போல பிரியாணி சாப்பிடுங்கள் என்றால்… விட்டு விடுவோமா..

அந்த வகையில், நாமக்கல் – மோகனூர் சாலையில், சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும்  பிரபல பிரியாணி கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று அதிகம் பிரியாணி சாப்பிடுவோருக்கான போட்டி நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடையின் உரிமையாளர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த போட்டிக்கு  நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்த நிலையில், 35 பேர் மட்டும் குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். பிற்பகல் 2.15 முதல் 2.35 வரை போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பிரியாணியை ஒரு பிடி பிடித்தனர். ஆனால் பெரும்பாலானோருக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிரியாணி சாப்பிட முடியாமல் திணறினர். 

இந்த போட்டியில் அதிக அளவில் பிரியாணி சாப்பிட்ட நாமக்கல்லை சேர்ந்த, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாளராக உள்ள சரவணன் என்பவர் முதலிடம் பிடித்தார். அவர் 20 நிமிடத்தில் 2 கிலோ 600 கிராம் அளவு பிரியாணி சாப்பிட்டு ரூ.5,001 ரொக்க பரிசை வென்றார். இரண்டாம் இடத்தை ஜீவா, மூன்றாம் இடத்தை கவின், நான்காம் இடத்தை சதீஷ்குமார் ஆகியோர் பிடித்தனர். இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை  பிரியாணி கடை உரிமையாளர்கள் செய்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.