பணக்காரர்களுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் சூறை; மம்தா சாடல்.!

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த மூன்று ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளன.

இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்து வருகின்றன. இதனிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறித்து, “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்திய ஒருமைப்பாடு, இந்திய நிறுவனங்களின் தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்கு ஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் இந்த அறிக்கை.” என அதானி குழுமம் விளக்கம் அளித்தது.

அதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க் நிறுவனம், “எங்கள் கேள்விகளுக்கு அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை. தேசியவாதம் என்ற போர்வை யில் அதானி குழுமம் தனது முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி செய்கிறது.” என பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என செபி அறிவித்தது. இதையடுத்து, எஃப்.பி.ஓ பங்கு விற்பனையை திரும்பப்பெற்ற அதானி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74 ஆயிரம் கோடி பங்குகளை எல்ஐசி வைத்து உள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது. இதன் மூலம், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ., வங்கி மூலமாக பொதுமக்களின் கணிசமான பணம் அதானி குழுமத்தில் சிக்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில் அதானி போன்ற சில பணக்காரர்களின் நலன்களுக்காக பொதுத்துறை நிறுவனங்களின் நிதி சூறையாடப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பனியில் விளையாடிய ராகுல் காந்தி; பாஜக தலைவரின் பரபரப்பு கருத்து.!

இது குறித்து அவர் கூறும்போது, ‘‘யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது. 2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது, முழுவதும் பொய்களால் நிரம்பியுள்ளது. சில பணக்காரர்களின் நலன்களுக்காக பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள் சூறையாடப்படுகின்றன. பாஜக அரசு அதை அனுமதிக்கிறது. 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.