புதுடில்லி மதுபான மோசடி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு?| New Delhi Liquor fraud related to Chief Minister Kejriwal?

புதுடில்லி, புதுடில்லி மதுபான கொள்கை மோசடி தொடர்பான குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. இதில், மதுபான தொழிலதிபர் ஒருவருடன், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது தொடர்பான ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வீடியோ கான்பரன்ஸ்’

புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மதுபான விற்பனை தொடர்பான கொள்கை ௨௦௨௧ல் மாற்றப்பட்டது.

இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. இந்நிலையில், அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்த மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மியின் ஊடகப் பிரிவு தலைவர் விஜய் நாயர், தன் மொபைல்போனில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதில், ‘இன்டோ ஸ்பிரிட்ஸ்’ என்ற மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சமீர் மகேந்துருவுடன், புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

குற்றப்பத்திரிகை

‘விஜய் நாயர் என்னுடைய ஆள் தான். நீங்கள் அவரை முழுமையாக நம்பி அடுத்த நடவடிக்கைகளில் இறங்கலாம்’ என, அப்போது கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

‘தெற்கு குழுமம்’ என்றழைக்கப்படும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங். கட்சியின் எம்.பி.,யான முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி, ‘அரபிந்தோ பார்மா’ நிறுவனத்தின் சரத் ரெட்டி ஆகியோருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளது.

இவர்களிடமிருந்து ௧௦௦ கோடி ரூபாயை விஜய் நாயர் வாங்கியுள்ளார். அது, கோவா சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ”அரசுகளை கவிழ்க்க, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது முழு பொய்,” என குறிப்பிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.