இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவு செய்வார் என்று இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2022 ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளனர்.

இந்நிலையில், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை சுட்டிக் காட்டி, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரை அனுமதிக்கும் வகையில், வேட்புமனுவில் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமியின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். மேலும், ஆணைய இணையதளத்தில் அதைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில இடைக்கால மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமும், ஓபிஎஸ் தரப்பும் பிப். 3-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, விசாரணையை பிப். 3-ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

உட்கட்சித் தேர்தல் உரிய முறையில், உரிய கால இடைவெளியில் நடத்தப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே தேர்தல் ஆணையம் கண்காணித்து உறுதி செய்யும். உட்கட்சி விவகாரங்களில் தலையிடாது. மேலும், உட்கட்சித் தேர்தலையும் கண்காணிக்காது. ஜூலை 11-ம் தேதி அதிமுக விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. ஏனெனில், அந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், எந்த தரப்பினரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சினையை எழுப்பவில்லை.

அங்கீகரீக்கப்பட்ட கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் மனுவை முறையாகப் பரிசீலித்து, அதை ஏற்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்குத்தான் உள்ளது. எனவே, அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியே முடிவெடுப்பார்.

தேர்தல் ஆணையப் பதிவேடுகளின்படி, யார் கட்சிப் பொறுப்பாளர்களோ உள்ளனரோ, அவர்களின் கையெழுத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் விதி. அதன்படி, அதிமுகவின் பொறுப்பாளர் எனப் பதிவேடுகளில் யாருடைய கையெழுத்து இருக்கிறதோ, அவர்களது கையெழுத்து ஏற்கப்படும்.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதிலை உச்ச நீதிமன்றம் எதிர்பார்த்தால், அதை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு மனு: இதேபோல, ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது. இந்த சூழலில், இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. எனவே, அதை விசாரணைக்கு ஏற்காமல், தள்ளு படி செய்ய வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து முடிவு செய்யும் வரை, கட்சியில் தனக்கென புதிய அதிகாரத்தை இபிஎஸ் உரிமை கோர முடியாது. இந்நிலையில், இடைக்கால மனுவை ஏற்று உத்தரவு பிறப்பித்தால், அது பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறுக்கு வழியில்…: அதிமுகவை தனது ஆதரவாளர்கள் மூலம் குறுக்கு வழியில் கைப்பற்றிவிடலாம் என்று கருதியுள்ள பழனிசாமிக்கு, கடந்த ஆண்டு செப். 30-ம் தேதி, ‘அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை இப்போதைக்கு நடத்தக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எரிச்சலை ஏற்படுத்திஉள்ளது.

எனவேதான், அவதூறுகளை அள்ளித் தெளித்து, எப்படியாவது உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுகளைப் பெற்றுவிட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.