ஒரு பள்ளிக்கூடத்தில், ஒரு ஆசிரியரும் ஒரேயொரு மாணவரும் மட்டுமே இருக்கின்றனர் என சொன்னால், உங்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறதா? நீங்க நம்பவில்லை என்றாலும், அதுதான் உண்மை! தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில், கடந்த ஒரு வருடமாக ஒரேயொரு ஆசிரியரும் ஒரேயொரு மாணவரும் மட்டுமே இருக்கின்றனர். பாரம்பரியமான அப்பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கீழபஜாரில் 1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது டிடிடிஏ என்ற தொடக்கப்பள்ளி. 3776 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகவும் பழமைவாய்ந்த இப்பள்ளியில், ஆரம்பத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்றுள்ளனர். இங்கு படித்த மாணவர்கள் பலர் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். எண்ணற்ற ஏழை, எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்த, இந்த டிடிடிஏ தொடக்கப்பள்ளியில் காலப்போக்கில் நிர்வாகக் குறைபாடு காரணமாக மாணவர் சேர்க்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஆங்கிலப் பள்ளிகளின் வருகையும் இப்பள்ளியை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 5 மாணவர்களை கொண்டு இயங்கி வந்த இப்பள்ளி, ஆண்டுதோறும் ஒன்று ஒன்றாக குறைந்து தற்போது ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் பள்ளியாக மாறியுள்ளது. வாசுதேவநல்லூர் புதுகாலனியில் வசிக்கும் இசக்கித்துரையின் மகன் கோபிதான் அந்த மாணவர். 1 ஆம் வகுப்பில் இருந்து படித்து வரும் அவர் தற்போது 4 ஆம் வகுப்பு படிக்கிறார்.
காலையில் 9 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்துவிடும் கோபி பள்ளிக்கூட வகுப்பறையில் தனியாக அமர்ந்து படிக்கிறார். பல நாள்களாக பராமரிக்காத வகுப்பறைகள் என்பதால், அதன் மேற்கூரையின் ஓடுகள் உடைந்து காணப்படுகிறது. வகுப்பறை முழுவதும் குப்பைக் கூளங்காக காட்சியளிக்கிறது. கழிவறை மூடப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. ஒரே ஒரு மாணவர் படிக்கிறார் என்றாலும் பள்ளியின் சுகாதாரம், கட்டடத்தின் தன்மை, பாதுகாப்பு ஆகியவை குறித்து கல்வித்துறையினர் ஏன் ஆய்வு செய்யவில்லையென்றும், இதுகுறித்து கல்வி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கவில்லையா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“இதுபோன்ற பள்ளிகளை தமிழ்நாடு அரசு ஊக்கவிப்பதற்கு என்னகாரணம் எனத் தெரியவில்லை. கல்வித்துறையின் கவனத்திற்கு ஏன் இதை கொண்டு செல்லவில்லை” என்பது இந்தப் பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்பாண்டியன்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பனிடம் கேட்டபோது, “டிடிடிஏ பள்ளி என்பது சிறுபான்மையினர் பள்ளி. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கப்பதற்கான வழிகளை நாம் பின்பற்றச் சொல்லி கடிதம் கொடுக்கலாம். பள்ளி நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாணவர் படிக்கிறார் என்பது குறித்து மேல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.
இருப்பினும் சக மாணவர்களோடு பழகாமல் தனித்து விடப்பட்ட ஒரு மாணவனின் கல்வி, மனநிலை குறித்து கவலை கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழ்நாட்டில் ஈராசிரியர் பள்ளி இப்போது ஓர் ஆசிரியர் பள்ளியாக மாறி இருக்கிறது. ஆனால் ஒரு மாணவர் பள்ளியாக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என வேதனையோடு தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
