கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி

வீரமே வாகை சூடும், தேவி 2 போன்ற பல திரைப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வதைக்கும் தேவதையாக உருவெடுத்து வருகிறார் டிம்பிள் ஹயாதி.

பிறந்தது தெலுங்கு மண்ணாக இருந்தாலும் இவரது பூர்வீகம் திருநெல்வேலி. தாட்சாயிணி என்ற இயற்பெயரை விட்டு வீட்டில் செல்லமாக கூப்பிடும் டிம்பிள் என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது. அதன்பின் எண் கணிதப் படி ஹயாதி என சேர்த்துக் கொண்டார். தமிழுக்கு புதுவரவான இவர் 19 வயதில் தெலுங்கில் வளைகுடா என்ற படத்தில் அறிமுகமாகி கவர்ந்தார். ரவி தேஜாவுடன் கில்லாடி, கடலகொண்ட கணேஷ், யுரேகா உள்ளிட்ட பல தெலுங்கு படங்களிலும் அத்ரங்கி ரே என்ற ஹிந்தி படத்திலும் நடித்த டிம்பிள் ஹயாதி அளித்த பேட்டி…

எனது அப்பா பழனிவேல் திருநெல்வேலிக்காரர். அம்மா மிருணாளினி விஜயவாடாவை சேர்ந்தவர். இருவரும் காதல் திருமணம். எனக்கு ஒரு தம்பி பணிசக்கரவர்த்தி அவரும் சில படங்களில் நடித்துள்ளார். நான் 5 வயதில் இருந்து குச்சுப்புடி நடனம் பயின்று வருகிறேன். திருப்பதியில் நடந்த பிரம்மோற்ஸவ விழாவில் குச்சுப்புடி ஆடினேன். அப்போது அதனை முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ரசித்து பாராட்டினார்.

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் புஷ்கர விழாவிலும் கின்னஸ் சாதனைக்காக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதன்பின் தான் இயக்குனர்கள் அணுகத் துவங்கினர். இப்படிதான் திரைத்துறையில் நுழைந்தேன்.எனது குடும்பத்தினர் பாரம்பரிய கலையில் நாட்டம் கொண்டதால் குச்சுப்புடி, வெஸ்டர்ன் இரண்டிலும் பயிற்சி அளித்தனர். எனினும் எல்.கே.ஜி., படிக்கும் குழந்தைகள் கூறுவது போல் டாக்டர், இன்ஜினியர் என கூறாமல் அப்பவே நான் ஹீரோயினாக வருவேன் எனக் கூறியது தான் என் நினைவுக்கு வருகிறது.

நான் அஜித் ரசிகை, என் தம்பி விஜய் ரசிகன். எனினும் இருவரும் இருவரையும் ரசிக்க ஆரம்பித்து விட்டோம். ஒரு நடிகையாக எந்த நடிகரையும் ஒதுக்க முடியாது. இருவரின் படங்களையும் நிச்சயம் முதல் நாளே பார்ப்பேன்.தெலுங்கில் கமர்ஷியல் படங்கள் தான் அதிகம். தற்போது தான் கன்னட காந்தாரா போல் படங்கள் வருகின்றன. தெலுங்கில் ரிஸ்க் எடுக்க முடியாது. ஆனால் தமிழில் நல்ல படங்கள் கொடுத்தால் மட்டுமே நிலைக்க முடியும்.

ரசிகர்களின் விருப்பமும் அதுதான். கவர்ச்சியும், ஒரு பாடல் நடனமும் எடுபடாது. ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அது மாதிரியான கதைகளில் தான் நடிக்க விரும்புகிறேன். குத்துப் பாடலும், கிளாமரும் ரசிகர்களின் நினைவில் நெடுநாள் நீடிக்காது. கதை, காலத்தை வென்ற கதாபாத்திரம் மட்டுமே நிலைக்கும். திரைப்படத்தில் கதையே வாகை சூடும். தமிழில் அதுபோல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல படங்களை மட்டும் தான் ஏற்று நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.