மயிலாடுதுறையில் 5-வது நாளாக தொடரும் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையைத் தாங்கி வளரக்கூடிய பொன்மணி எனப்படும் மோட்டாரக நெல்லான சிஆர் 1009 பயிர்கள் நடப்பாண்டு சம்பா பருவத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.

இதில், ஆனந்த தாண்டவபுரம், பொன்னூர், பாண்டூர், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர், ஆக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளமாக உள்ள இடங்களில் இந்த ரக நெற்பயிரை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இப்பயிர்கள் தற்போது நெற்கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வயலிலேயே நெற்கதிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. இவற்றை வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன், உதவி வேளாண் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகள் கூறியபோது, “நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சிஆர்1009 ரக நெல்லை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. தனியாரிடமும் நியாயமான விலை கிடைக்காது என்பதால், கொள்முதல் நிலையங்களில் காத்திருந்து விற்றுவருகிறோம். தற்போது மழையால் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறோம்.

எனவே, ஈரப்பத அளவை 23 சதவீதம் வரை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.