வாஷிங்டன்,-அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலுானை, அமெரிக்க ராணுவ போர் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தியது. அட்லான்டிக் கடலில் வீழ்ந்த பலுானின் பாகங்கள் மற்றும் அதில் இருந்த கருவிகளை மீட்டெடுக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இந்த தாக்குதலை கண்டித்துள்ள சீன அரசு, ‘விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, எச்சரித்து உள்ளது.
அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் மோண்டானா என்ற அணுசக்தி ஏவுதளத்தின் மீது, வெள்ளை நிற பலுான் பறந்ததை, அமெரிக்க ராணுவம் கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தது.
அமெரிக்க ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய இடங்களை கண்காணிக்க, சீனா அனுப்பியுள்ள உளவு பலுான் தான் அது என்பதை அமெரிக்கா உறுதி செய்தது.
இந்த தகவல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் பலுானை உடனடியாக சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். மக்கள் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பாதுகாப்பு கருதி, அதை உடனடியாக சுட்டு வீழ்த்தாமல், அமெரிக்க ராணுவம் கண்காணித்து வந்தது.
மிக உயரமாக பறந்த இந்த பலுான், கடந்த மாதம் 28ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவுக்குள் நுழைந்தது.
அதன் பின் ஜன., 30ல் வட அமெரிக்க நாடான கனடாவின் வான்வெளிக்குள் நுழைந்தது. மீண்டும் கடந்த 31ல், வடக்கு இடாஹோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தது.
அந்த பலுானை தொடர்ந்து கண்காணித்ததன் வாயிலாக, அதன் தொழில்நுட்பம் மற்றும் உளவு பார்க்கும் திறன் ஆகியவை குறித்து அமெரிக்க அரசு கண்டறிந்தது. தெற்கு கரோலினா அருகே உள்ள அட்லான்டிக் கடல் மீது அந்த பலுான் பறக்கத் துவங்கியதும், அந்த வாய்ப்பை பயன்படுத்தி பலுானை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் முடிவு செய்தது.
உடனடியாக, விர்ஜினியாவில் உள்ள லாங்லே விமானப் படை தளத்தில் இருந்து பறந்து வந்த போர் விமானம், உளவு பலுானை நேற்று சுட்டு வீழ்த்தியது.
மக்களுக்கு பாதிப்புகள் எதுவும் இன்றி பலுானின் சிதறிய பாகங்கள் கடலில் விழுந்தன. பலுானில் இருந்து விழுந்த பாகங்கள் மற்றும் கருவிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அமெரிக்க கடற்படை மற்றும் எப்.பி.ஐ., ஈடுபட்டுள்ளன.
![]() |
உளவு பலுான் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விவகாரத்தில் ராணுவத்தை பயன்படுத்திய அமெரிக்காவின் செயல் மிகையானதாகவும், சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகவும் உள்ளது. இதற்கான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும்’ என தெரிவித்து உள்ளது.
சுட்டு வீழ்த்தியது எப்படி?
சீன உளவு பலுான், அமெரிக்க நிலப்பரப்பின் மேல், 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. இது, மூன்று பேருந்துகளின் அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. நிலப்பரப்பு மேல் இருந்து கடல் பகுதிக்கு மேல் பலுான் பறக்க துவங்கியதும், அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மூன்று விமான நிலையங்களில் விமான வருகை மற்றும் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டன. விர்ஜினியாவின் லாங்லே விமானப் படை தளத்தில் இருந்து பறந்து வந்த, ‘எப் – 22’ ரக போர் விமானம், ஒரே முயற்சியில் உளவு பலுானை சுட்டு வீழ்த்தியது. பலுானில் இருந்து சிதறி விழுந்த பாகங்கள் கடலில் 47 அடி ஆழத்திலும், மேல் பரப்பில் 10 கி.மீ., வரையிலும் பரவிக் கிடப்பதாக அதிகாரிகள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்