சரியும் மதிப்பு.. பங்குகள் மீதான ரூ.9,223 கோடி கடன்கள்.. அதானி குழுமம் அதிரடி முடிவு

பங்குகளுக்கு எதிராக வாங்கிய 1,114 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை, அதானி குழுமம் முன்கூட்டியே கட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 24ஆம் தேதி அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், வெளியிட்ட ஓர் அறிக்கையால் அந்த நிறுவனம் தொடர்ந்து சரிவுகளைச் சந்தித்து வருகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நாள் முதலே தொடர்ச்சியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இறங்குமுகத்திலேயே இருக்கின்றன. அதானி குழுமம் வெளியிட்ட விளக்க அறிக்கைக்கும் எவ்வித பலனும் கிட்டவில்லை. இதனையடுத்து, சரிவை தடுக்கும் பொருட்டு அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், அதானி குழுமம், பங்குகளுக்கு எதிரான கடன்களை முழுமையாகத் திரும்பச் செலுத்த திட்டமிடுவதாகவும், இந்தத் தொகையை அடுத்த 30 – 45 நாட்களில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதையடுத்து போர்ட்போலியோவுக்கு எதிரான கடன்களை முன்கூட்டியே செலுத்த விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சத்தினைப் போக்கும் என நம்பப்படுகிறது. மேலும், அதானி குழுமத்தின் மீதான குறைந்த நம்பிக்கையை மீட்டெடுக்கவும், இது பயனுள்ளதாக இருக்கும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், 1,114 மில்லியன் அமெரிக்க டாலர்களை (9,223.9 கோடி ரூபாய்) முன்கூட்டியே செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
image
முதலீட்டாளர்களின் கவலையைப் போக்கவே அதானி குழுமம் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ETயில் வெளியான அறிக்கை ஒன்றில் இரண்டு அதானி நிறுவனங்களின் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இதில் அதானி போட்ஸ் & செஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட இரு நிறுவனங்களும் அடங்கும்.
அதானி விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவதுடன், நாடாளுமன்ற அவைகளையும் முடக்கி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், “பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்படும் எல்லாத் திட்டங்களுமே, பொதுவெளியில் வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டுத்தான் நிறைவேற்றப்படுகிறது. அதானிக்கு சாதகமாக நாங்கள் செயல்படவில்லை. எதிர்க்கட்சிகள்தான் இதில் நாடகமாடுகின்றன. இதுகுறித்து விவாதிக்கவும் நாங்கள் தயார்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குறித்த முழுச் செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.