சமீபத்தில் சென்னையில் ரோகிணி தியேட்டருக்கு `துணிவு’ படம் பார்க்கச் சென்ற வாலிபர் ஒருவர் லாரியின்மீது ஏறி நடனமாடிக்கொண்டிருக்கும்போது கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி ரோகிணி தியேட்டரிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஊழியர் ஒருவர் வந்திருக்கிறார். தண்ணீர்த் தொட்டி அருகில் வந்ததுமே தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. அருகில் சென்று தொட்டியைத் திறந்துப் பார்த்தபோது நாற்றம் அதிகரித்திருக்கிறது. என்ன காரணமாக இருக்கும் என்று தொட்டியில் பார்த்திருக்கிறார். அப்போது, தொட்டியில் இறந்த நிலையில் ஓர் ஆண் சடலம் இருந்திருக்கிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து தியேட்டர் மேலாளரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். மேலாளரும் உடனடியாக, இந்தச் சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து வந்த போலீஸார், இது குறித்து விசாரணை நடத்தியதுடன், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், அழுகிய நிலையிலிருந்த ஆண் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அந்தச் சடலம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “தண்ணீர்த் தொட்டிக்குள் இறந்துகிடந்தது, பூந்தமல்லியைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர் என்று தெரியவந்திருகிறது. அவர் அதே தியேட்டரில் பிளம்பராகப் பணியாற்றி வருகிறார். கடைசியாக அவர் கடந்த ஜனவரி 26-ம் தேதி அதீத மது போதையில் வேலைக்கு வந்திருக்கிறார். அதன் பிறகு வேலைக்கு வரவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
போதையிலிருந்த வெங்கடேச பெருமாள் தொட்டியில் விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரும் கொலைசெய்து தண்ணீரில் தள்ளிவிட்டார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். பிரேத பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே உண்மையான காரணம் தெரியவரும்” என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.