புதுடெல்லி: ஜம்மு பல்கலைக்கழகத்தில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது. தடுப்பூசிகள், மொபைல் போன்கள், பாதுகாப்பு உபகரணங்களின் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும், சுமார் 90,000 ஸ்டார்ப்அப் எனப்படும் புத்தாக்க தொழில் நிறுவனங்கள் மற்றும் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள 107 யூனிகார்ன் நிறுவனங்களுடன் உலகளவில் இந்த துறையில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது, இந்திய இளைஞர்களின் திறமையினால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது.
பசுமை பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண, பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்க நிலையான முதலீடுகள் தேவை. அந்த இலக்கினை நோக்கி இந்தியா வேகமாக நகர்ந்து வருகிறது.
ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் உலகளாவிய மையமாக இந்தியா மாறி வருகிறது. இந்திய இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுமை வேலைகளை உருவாக்கிட தேவையான ரூ.8 லட்சம் கோடி முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். இது, உலகளவில் 10 சதவீதமாகும்.
இன்று உலகமே புதிய இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.