சீனாவின் ஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்ஷாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை வாகனங்கள் வழக்கம்போல் சென்றுக் கொண்டிருந்தது. எப்போதும் பரபரப்புடன், நெரிசல் மிகுந்து காணப்படும் இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒன்றோடு மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
கார்கள், லாரிகள் என 50-க்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இதில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இதில் அங்கு கரும் புகை மண்டலம் சூழ்ந்தது. சாலையில் வாகனம் நெரிசல் காணப்பட்டதால் வாகனங்களில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் கருகியது.
இந்த கோர விபத்தில் உடல் நசுங்கியும், தீயில் கருகியும் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. சீனாவில் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாததால் சாலை விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம், கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.