
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான மனுத் தாக்கல் செய்யும் பணி இன்று முடிவுக்கு வருகிறது. முன்னதாக, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமியும், செந்தில் முருகனை ஓ.பன்னீர் செல்வமும் வேட்பாளராக அறிவித்தனர். இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார் என ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் அறிவித்தார்.
இதற்கிடையில் டெல்லி சென்றுள்ள அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதங்கள் பெறப்பட்டன. தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் ஒப்புதல் கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி தேர்தல் ஆணையம்தான் அதுபற்றி முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வின் 2,646 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பேர் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.அதில் 145 பேரின் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை. யாரும் தென்னரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அனைத்து உரிமையும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கே வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான சின்னத்திற்கான ஏ.பி. படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.