பீகார் மாவட்டத்தில் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரையில் 2 கி.மீ. தொலைவுக்கு சரக்குகளை ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், சர்க்கரை ஆலை மூடப்பட்டதும் இந்த தண்டவாள பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்து உள்ளது.
இதை நோட்டம் விட்ட திருட்டுக் கும்பல் ஒன்று சுமார் இரண்டு கி.மீ. தொலைவுக்கு அமைந்த அந்த ரயில்வே தண்டவாளத்தை பெயர்த்தெடுத்து விற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த விஷயம் கடந்த மாதம் 24ம் தேதிதான் ரயில்வே நிர்வாகத்துக்கே தெரிய வந்ததாம். இதுபற்றி அறிந்ததும் சமஸ்திப்பூர் ரயில்வே வாரியம், தனது 2 ஊழியர்களை சஸ்பெண்டு செய்துள்ளது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு துறை சார்ந்த விசாரணை நடந்து வருகிறது. இதுபற்றி வழக்குப் பதிவும் செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நூதன தண்டவாளத் திருட்டில் ரயில்வே ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் ரயில்வே துறைக்கு எழுந்துள்ளதால் அந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் இந்த மாதிரி திருட்டு ஒன்னும் புதுசு இல்லையாம்..பீகார் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு கர்காரா என்ற இடத்தில் பழுது அடைந்து நின்ற ரயிலின் இன்ஜினை ஒரு திருட்டு கும்பல் திருடி அதனை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து பழைய இரும்பக் கடையில் போட்டு காசு பார்த்துவிட்டார்கள்.
இந்த மாதிரி ரயில் இன்ஜின், ரயில் தண்டவாள திருட்டு மட்டும் கிடையாதுங்க, பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் ஒரு செல்போன் டவரையே பிரித்தெடுத்து திருடிச் சென்ற சம்பங்கள் கூட நடைபெற்று இருக்கிறதாம்.