குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை..!! குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. இந்த தம்பதிக்கு மித்ராஸ்ரீ (8), ரக்சனாஸ்ரீ (7) என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது 2 மகள்கள் மற்றும் உறவினர் மகள் தாரணி (4) ஆகியோரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது மதுரையின் பிரபல உணவு வகையான ஜிகர்தண்டா கோவில் அருகில் உள்ள ஒரு குளிர்பானக் கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்த்த சிறுமிகள் அன்புசெல்வத்திடம் வாங்கித் தரக் கேட்டுள்ளனர். இதையடுத்து குழந்தைகளுக்கு அவர் ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்தார். அதனைக் குடித்த மூன்று சிறுமிகளும் திடீரென வாந்தி எடுத்தனர்.

 

இதனால் சந்தேகமடைந்த ஜானகிஸ்ரீ குழந்தைகள் குடித்த ஜிகர்தண்டாவை வாங்கி பார்த்தார். அதில் போடப்பட்டிருந்த ஐஸ்கிரிமீல் ஒரு தவளை இறந்து கிடந்தது. இதனால் அன்புசெல்வம், ஜானகிஸ்ரீ அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வாந்தி எடுத்த மூன்று சிறுமிகளையும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஐஸ்கிரீமில் தவளை கிடந்தது குறித்து மதுரை திருப்பரங்குன்றம் போலீசில் ஜானகிஸ்ரீ புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குளிர்பானக் கடையின் உரிமையாளர் துரைராஜன்(60) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.