முதியோர் பென்ஷன் தொகை – கைவிரித்த ஒன்றிய அரசு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், முதியோர் பென்ஷன் தொகையை உயர்த்தும் திட்டம் இல்லை என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

“முதியோர் பென்ஷன் தொகை கடந்த 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பது அரசுக்குத் தெரியுமா?; பட்ஜெட்டில் அதை உயர்த்தும் திட்டம் ஏதும் உள்ளதா?; கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதியோர் பென்சனுக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு?” என்பன உள்ளிட்ட கேள்விகளை நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி எழுப்பியிருந்தார்.

அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, “இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 60 முதல் 79 வயது வரையிலானவர்களுக்கு மாதம் 200 ரூபாய் வழங்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு இது 75 ரூபாயிலிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 2011 ஆம் ஆண்டு முதல் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

15 ஆவது நிதி குழு காலகட்டத்துக்கு (2021-26) இந்தத் தொகை குறித்து சீராய்வு செய்யப்பட்டது . இந்தத் திட்டத்தை இதே நிலையில் தொடர்வது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. எனவே இதை உயர்த்தும் யோசனை அரசிடம் இப்போது இல்லை. ஆனால் மாநில அரசுகள் அதற்குமேல் உயர்த்திக் கொடுக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், “பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தத் திட்டத்துக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது 2011 ஆம் ஆண்டில் 6596.47 கோடியும்; 2012 இல் 7884.35 கோடியும்; 2013 இல் 9112.46 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பட்ஜெட்டிலேயே இதற்கான நிதி ரூ.4180.98 கோடியாக முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்டதில் இருந்து பாதியாகக் குறைக்கப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வருகின்றனர்.” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “2021- 22 ஆம் ஆண்டுக்கு ரூ.5806.39 கோடி ஒதுக்கியுள்ளனர். 2022-23 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கு ரூ.6602.09 கோடி ஒதுக்கினர். இந்த ஆண்டுக்கான 2023-24 பட்ஜெட்டில் ரூ.6634.32 கோடி ஒதுக்கியுள்ளனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2013 இல் ஒதுக்கியதைவிட இப்போது ஒதுக்கியுள்ள தொகை ரூ.2478.14 கோடி குறைவாகும். இந்த நாட்டின் மூத்த குடிமக்களை இந்த அரசு எப்படி உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு இதுவொரு சான்று.” என ரவிக்குமார் எம்.பி., சாடியுள்ளார்.

“ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை ஆராய்ந்த நாடாளுமன்ற எஸ்டிமேட் கமிட்டி 200 ரூபாயை 300 ஆக உயத்தவேண்டும் எனப் பரிந்துரை செய்தது. அதற்குப் பின் சுமார் 10 ஆண்டுகள் சென்ற பின்பும் இந்தத் தொகை 200 ரூபாய் என்பதாகவே உள்ளது.” எனவும் ரவிக்குமார் எம்.பி., சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.