வானதிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி., காட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்று. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடந்து முடிந்துள்ளது. அதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.

அதற்கு முந்தைய நாள் ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக அமைச்சர் சேகர் பாபு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அமைச்சர் சேகர் பாபு, அவருடன் வந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கோயில் கருவறைக்குள் சென்றதாக கூறி சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து, கோயிலில் ஆகம விதி மீறப்பட்டுள்ளது. இதனால் பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அர்ச்சகர் என்று கூறப்படும் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்றும் பரவியது.

அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் சேகர் பாபு, அதிகாரிகள் ஆகியோர் கோயில் கருவறைக்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டியுள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான
வானதி சீனிவாசன்
, பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“கும்பாபிஷேகத்துக்கு முதல்நாள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும், துறை அதிகாரிகளும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பழநி கோயில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியையும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கிறது. இது அப்பட்டமான ஆகம மீறல். அது மட்டுமல்ல, இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். எனவே, இதற்காக, முருக பக்தர்களிடம் பகிரங்கமாக அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற ஆகம மீறல்கள் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்துக்களின் உணர்வுகளை மதித்து, ஆகம விதிகளைப் பின்பற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும். பழநி கோயிலில் பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.” என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், வானதியும், சனாதன பிற்போக்குவாதிகளும்தான் மன்னிப்பு கேட்கவேண்டும் என ரவிக்குமார் எம்.பி., காட்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிராமணர் அல்லாதார் கருவறைக்குள் நுழையக்கூடாது என்பது தீண்டாமை! பல நூறு ஆண்டுகளாகக் கருவறைத் தீண்டாமையைக் கடைபிடித்து வருவதற்காக வானதி சீனிவாசனும், சனாதன பிற்போக்குவாதிகளும்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.