அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் உதவியால் சிகிச்சை பெற்ற சிறுமி டான்யாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யாவுக்கு பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளித்தும் முகச்சிதைவு நோய் குணமாகவில்லை. இதனையடுத்து தங்கள் மகளுக்கு உதவுமாறு பெற்றோர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து முதலமைச்சர் சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மருத்துமனைக்கு நேரில் சென்று சிறுமி டான்யவை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிறுமி டான்யாவின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது முதல்வர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து முதல்வருக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
newstm.in