புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு ரூ.7 கோடிக்கு மேற்பட்ட மருத்துவ சாதனங்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கை: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு 5,945 டன் எடையுள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 27 வகையான உயிர்காக்கும் மருந்துகள், இரண்டு விதமான பாதுகாப்பு பொருட்கள், 3 விதமான தீவிர சிகிச்சை உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.7 கோடிக்கும் மேல் இருக்கும்.
கடந்த 6-ம் தேதி, ஹிண்டன் விமானப்படை தளத்தில் 3 லாரிகளில் உயிர் காக்கும் மருந்துகள், பாதுகாப்பு பொருட்கள் 12 மணி நேரத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடந்த 10-ம்தேதி துருக்கி மற்றும் சிரியாவுக்கு அதிகளவிலான நிவாரணபொருட்கள் ஏற்பாடு செய்யப் பட்டன.
சிரியாவுக்கு அனுப்பப்பட்ட விமானத்தில் 72 அவசர கால மருந்துகள், 7.2 டன்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு பொருட்கள் அனுப்பப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1.4 கோடி. துருக்கிக்கு 14 விதமான மருத்துவ மற்றும் தீவிர சிகிச்சை உபகரணங்கள் அனுப்பப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.4 கோடி.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘உலகம் ஒருகுடும்பம் என்ற இந்திய பாரம்பரியப்படி துருக்கி, சிரியாவுக்கு இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.