திருமங்கலம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், மதுரையில் இருந்து கோவைக்கு 3 மணி நேரத்தில் ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் செல்வம் (33). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துமணி, 2 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 14ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் செல்வம் தலையில் படுகாயம் அடைந்தார். மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். 
அவரது உறுப்புகளை தானமாக கொடுக்க மனைவி மற்றும் பெற்றோர் அனுமதி வழங்கினர்.கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சந்திரமோகன் என்பவருக்கு இதயமும், புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் மகாராஷ்டிரா மாநிலம், புனேயை சேர்ந்த பாபுராவ் நகாடி என்பவருக்கு கல்லீரலும் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நேற்று காலை செல்வத்தின் இதயம், கல்லீரல் எடுக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரு ஆம்புலன்ஸ் வாகனங்களும் தடையின்றி செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கோவைக்கு 3 மணி நேரத்திலும், புதுக்கோட்டைக்கு 1.45 மணி நேரத்திலும் சென்று உரியவர்களுக்கு பொருத்தப்பட்டது.