ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எச்.கிருஷ்ணன் உன்னி, தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜ்குமர் யாதவ் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: மொத்தமுள்ள 238 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 286 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியானதால் கூடுதலாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. எனவே மொத்தமாக 1,430 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 20 சதவீதம் ரிசர்வ் ஒதுக்கீட்டுடன் தயார் நிலையில் உள்ளன.
ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 5 வாக்குப்பதிவு இயந்திரம், 1 கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் பொருத்தப்பட உள்ளது. முதல்நிலை சரிபார்க்கும் பணி முடிந்தவுடன் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலக வைப்பறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிபிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு, அதில் வேட்பாளரது புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தல் தொடர்பாக வரும் புகார்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான க.சிவகுமார் உடனிருந்தார்.