புதுடெல்லி: துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணிகள் மற்றும் சுகாதார உதவிகளை வழங்க ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்தியா உடனடியாக உதவிக்கரம் நீட்டியது. தேசிய பேரிடர் மீட்புப் பணியின் 151 வீரர்களும், மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இதே ராணுவ மருத்துவ குழுவினரும் மருத்துவ உபகரணங்களுடன் துருக்கி புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், துருக்கியில் தற்போது மீட்புப்பணிகள் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, இந்திய குழுவினர் நேற்று புறப்பட்டனர்.
ஹடே மாகாணத்தின் இஸ்கன்டருன் பிராந்தியத்தில் மருத்துவ சேவைகள் மேற்கொண்ட இந்திய மருத்துவ குழுவுக்கு உள்ளூர் மக்கள் நன்றி தெரிவித்து கரகோசம் எழுப்பி வழியனுப்பி வைத்ததாக ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல, மீட்புக்குழுவினரும் நாடு திரும்பியிருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.