தமிழகத்திற்கு நீட் விலக்கு வருமா ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வதென்ன..!!

ஈரோடு வ.உ.சி. பூங்கா நடைபயிற்சி மைதானத்தில் நேற்று காலை அமைச்சர் மா. சுப்பிரமணியம் யோகா மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நீட் தொடர்பான மசோதா ஜனாதிபதி மேல் நடவடிக்கைக்காக அனுப்பியதை உள்துறை அமைச்சகம் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும், ஆயுஷ் அமைச்சகத்திற்கும் அனுப்பி உள்ளது. 2 அமைச்சகமும் சிறு விளக்கம் கேட்டு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடிதம் அனுப்பியது. அதற்கும் விளக்கம் அனுப்பி இருக்கின்றோம்.

ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து கடிதம் மீண்டும் வந்துள்ளது. அதற்கு பதில் அனுப்பும் பணி நடந்து வருகிறது. நீட் விலக்கு பெற தொடர்ச்சியாக பணி நடந்து வருகிறது. ஏற்கனவே எடப்பாடி தலைமையிலான அரசு நீர்த்துப்போன சட்டம் 1956-ல் வந்த பழைய சட்டத்தை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கை தொடர்ந்து நடத்தினால் பாதகமான தீர்ப்பு வரும். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டின் முதல்வர் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி புதிய வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார்.

இவ்வாறு பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். எனவே தமிழகத்திற்கு நிச்சயம் நீட்டிலிருந்து விலக்கு கிடைக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக 2015-ல் அறிவிப்பு வெளியானது. 2018-ல் அமைச்சரவை ஒப்புதல் தந்தது. 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 8 ஆண்டு காலம் இதற்கான முயற்சி நடைமுறையில் இருக்கிறது என்றாலும் அதற்கான நிதி ஆதாரம் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஆதாரமாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜெய்க்கா நிதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பணிகளுக்கு கடன் பெறுவதற்கான விளக்கங்களையும் வரைபடங்களையும் டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயிக்கா நிறுவனத்திடம் விளக்கி இருக்கின்றோம். தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே நிதி ஆதாரம் கிடைக்கும். ஒன்றிய அரசு நிதி ஆதாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்போதுதான் இதற்கான தனி அலுவலர் ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது. இதை முதலிலேயே செய்திருந்தால் அங்கிருந்து நிதி பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியிருக்கலாம்.

தமிழ்நாட்டிற்கு தேவையான வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றிருக்கின்றோம். எய்ம்ஸ் நிதி ஆதாரத்தை கேட்டிருக்கின்றோம். ஏப்ரல் மாதத்தில் டெண்டர் முடிந்தவுடன் கட்டுமானத்திற்கான ஒப்பந்தங்கள் பெறப்படும். அவை இறுதி செய்யப்பட்டு 2024 இறுதியில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். 2024-ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கினால் 2028 இறுதியில் தான் பணிகள் முடியும். இது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.