புதுடில்லி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் நக்சலைட் அமைப்பு உடனான தொடர்பு குறித்த இரு வழக்குகளில், அசாமைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ., அகில் கோகோயை கைது செய்ய, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2019ல் போராட்டம் நடந்தது.
அப்போது சுயேச்சை எம்.எல்.ஏ., அகில் கோகோய் என்பவர் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தார்; தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இவர் மீது, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து, இவர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தது.
இந்த வழக்கில், கோகோயின் கூட்டாளிகள் மூவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அளித்தது.
ஆனால், எம்.எல்.ஏ., அகில் கோகோய் 500க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு, 2021 ஜூலையில் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அளித்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., தரப்பில் மேல்முறையீடு செய்யப் பட்டது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, எம்.எல்.ஏ., அகில் கோகோய் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.எல்.ஏ., கோகோயை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி என்.ஐ.ஏ.,வுக்கு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்