ஆமதாபாத்,குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா, ௧௦ லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, தலா, ௨ லட்சம் ரூபாயும் இடைக்கால இழப்பீடு வழங்கும்படி, அதை பராமரிக்கும் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள மோர்பியில், மச்சு நதியின் குறுக்கே இருந்த, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இரும்பு தொங்குப் பாலம், கடந்தாண்டு அக்., ௩௧ல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில், ௧௩௫ பேர் உயிரிழந்தனர்; ௫௬ பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், உயர் நீதிமன்ற அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு, மத்திய – மாநில அரசுகள் இணைந்து, தலா, ௧௦ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்த பாலத்தை பராமரித்து வந்த ‘ஒரேவா’ குழுமம், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா, ௫ லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, தலா, ௧ லட்சம் ரூபாயும் இடைக்கால இழப்பீடாக வழங்குவதாக கூறியுள்ளது; இது போதாது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு, தலா ௧௦ லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, தலா, ௨ லட்சம் ரூபாயும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் இந்தத் தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement