புதுடெல்லி: அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் ‘கடுமையான குற்ற வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நபர் அரசு துறையில் துப்புரவு பணியாளராகவோ அல்லது காவலராகவோ சேர முடியாது. ஆனால் அதே போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு நபர் எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ கூட ஆகி விடலாம். அதனால் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நபர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜோசப் கூறுகையில்,‘‘ தலைவிரித்தாடும் ஊழலினால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எந்த ஒரு அரசு அலுவலகத்துக்கும் செல்லுங்கள். பணம் கொடுக்காமல் எந்த ஒரு விஷயமும் அங்கு நடைபெறாது என்று பிரபல வழக்கறிஞரான நானி பல்கிவாலா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தின் பெயரில் நடக்கும் விஷயங்களை பற்றி நான் எதுவும் கருத்து கூறமாட்டேன்.
ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து விசாரித்த அரசியல் சட்ட பெஞ்ச் இது தொடர்பான சட்டத்தில் கூடுதலாக எதையும் சேர்க்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது. எனவே அரசு தான் இதை பற்றி முடிவெடுக்க வேண்டும்’’ என்றார். இந்த வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.