தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில், அந்த ஆசிரமத்தின் உரிமையாளர்களான ஜூபின் பேபி – மரியா தம்பதி உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில், வயதான தாஸ் என்பவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ஜூபின் பேபி, மரியா, பீஜூமோகன், பூபாலன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன், சதீஷ் ஆகியோர் சிறையில் இருந்துவந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இவர்கள் எட்டுப் பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 23-ம் தேதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி, இன்றைய தினம் ஜூபின் பேபி உள்ளிட்ட எட்டுப் பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர், எட்டுப் பேரையும் மூன்று நாள்கள் காவலில்வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு அனுமதியளித்த நீதிபதி, விசாரணை முடிந்ததும் வரும் 28-ம் தேதி காலை 10 மணிக்கு எட்டுப் பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படுத்தும்படி உத்தரவிட்டார்.