இறப்பிலும் இணை பிரியாத தம்பதி விசைத்தறி சங்க தலைவர் சாவு அதிர்ச்சியில் மனைவியும் மரணம்

சோமனூர்: கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவராக இருந்தவர் பழனிச்சாமி (76). அவரது மனைவி கருப்பாத்தாள் (68). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவரது சகோதரரும், சோமனூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான குருசாமி மாரடைப்பால் காலமானார். தொடர்ந்து பழனிச்சாமியும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இரவு பழனிச்சாமி காலமானார். கணவர் இறந்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சியில் மறுநாள் கருப்பாத்தாளும் உயிரிழந்தார். தம்பதியர் இருவரின் உடல்களுக்கு நேற்று காலை சோமனூர் செந்தில் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு ஊர்வலமாக சோமனூர் பவர்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள விசைத்தறி சங்க அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம் மயானத்தில் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.