ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்திருந்தனர்.
இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்து தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தங்கும் விடுதிகளை காலி செய்து வருகின்றனர்.
தேர்தல் விதிகளை மீறி தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் வெளியூர் நபர்கள் தங்கி இருக்கிறார்களா என்பதை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்காக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி தங்கியிருப்பவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.