திருச்சி ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலைப் பகுதியில் சாக்சீடு குழந்தைகள் இல்லம் செயல்பட்டுவருகிறது. இங்கு ஆதரவற்ற, கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுவருகின்றனர். அந்த வகையில் இந்தக் காப்பகத்தில் மொத்தம் 32 குழந்தைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், நேற்றிலிருந்து காப்பகத்தில் இருந்த 11 குழந்தைகளுக்குத் தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து இரவு மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து குழந்தைகள் காப்பக நிர்வாகிகள் உடனடியாக குழந்தைகளை ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட 11 குழந்தைகளும் ஒரு வயதுகூடப் பூர்த்தியடையாத பச்சிளம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து குழந்தைகள் வார்டில்வைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க இயலாத காரணத்தால், பசும் பால் வழங்கிவந்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே, பருவநிலை மாற்றம் காரணமாகவே குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதாக, குழந்தைகளைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
காப்பகத்திலுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு முறையான, ஊட்டச்சத்துள்ள உணவுகள் அளிக்கப்படுகின்றனவா என ஆய்வுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.