ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நக்சலுக்கு எதிரான நடவடிக்கையின்போது 3 போலீசார் பலியானார்கள். சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மாவட்ட ரிசர்வ் போலீசார் விரைந்தனர். ஜகர்குண்டா மற்றும் குண்டட் கிராமங்கள் இடையே ரிசர்வ் போலீசார் நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனைதொடர்ந்து வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
நக்சல்கள் தாக்கியதில் உதவி ஆய்வாளர் உட்பட 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்ற நக்சல்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் அவர்களது உடல்களை சக நக்சல்கள் காட்டுக்குள் எடுத்து சென்றுவிட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 போலீசார் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் புபேஷ் பாகல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.