மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிக்கல்வித் துறையில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த ஜெகநாதன், முத்து விஜயன், மீனாட்சி, ரவி, தங்கராஜ், முருகேஸ்வரி, ஜெயந்தி, முருகேசன், நாராயணன், பாண்டி, ஜோதி சிங், முருகன் உள்ளிட்டோர் தங்களை பகுதிநேர ஊழியர்களாகக் கருத்தில் கொண்டு பணப்பலன் வழங்கவும், பதவி உயர்வு வழங்கவும் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் அப்போதைய பள்ளிக்கல்வித் துறைச் செயலரும், தற்போதைய முதல்வரின் முதன்மைச் செயலருமான டி.உதயசந்திரன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கல்வித் துறை வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றி கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறினால், முதல்வரின் முதன்மைச் செயலர் டி.உதயசந்திரன், முதன்மைக் கணக்காயர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை பிப். 24-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித் துறை சார்பில், அந்தந்த மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை ஏற்க மறுத்த நீதிபதி, உதயசந்திரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக, ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பித்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
பின்னர், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, பள்ளிக்கல்வித் துறை வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மார்ச் 3-ம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து, உதயசந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் திரும்பப் பெறப்பட்டு, விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.